பாலிவுட்டில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபலமான சோனு சூட், கொரோனா பரவலின் போது பல பொதுமக்களுக்கு தன்னார்வமாக உதவியளித்து பெரிய பாராட்டைப் பெற்றவர். கடந்த மார்ச் 23ம் தேதி அவரது மனைவியும் சகோதரியும் நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளாகினர். காரில் ஏற்பட்ட சேதம் அதிகமாக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இந்த மூவரும் தற்போது நலமுடன் உள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், அனைத்து பயணிகளும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என மிகவும் உணர்ச்சிபூர்வமாக அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “சில நாட்களுக்கு முன்பு என் மனைவி மற்றும் அவருடைய சகோதரி பயணித்த கார் பெரிய விபத்துக்குள்ளானது. அவர்கள் உயிர் பிழைத்ததற்கான காரணம், அவர்கள் அணிந்திருந்த சீட் பெல்ட் தான். என் மனைவி, பின்புறத்தில் அமர்ந்திருந்த தனது சகோதரியிடம் சீட் பெல்ட் அணியச் சொன்னார். அவர் சொன்னபடியே அந்த நேரத்தில் சீட் பெல்ட் அணிந்ததால், விபத்து நேரத்தில் இருவரும் பாதுகாப்பாக இருந்தனர்.
பலர் குறிப்பாக வாகன ஓட்டுனர்கள், சீட் பெல்ட்டை காவல்துறையிடம் தப்பிக்க வேண்டிய ஒன்று என்று மட்டுமே அணிகின்றனர். ஆனால் பின்புறத்தில் அமர்ந்தவர்களும் சீட் பெல்ட் அணிய மறுக்கின்றனர். ஆனால் இந்த சாதாரணமான பாதுகாப்பு கட்டுப்பாடு உங்கள் உயிரையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றக்கூடியது,” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.