பவன் கல்யாணின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hari Hara Veera Mallu’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பவன் கல்யாண், அரசியலுக்கு வருவதற்குமுன் மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அரசியல் பணி அதிகமாகியதால் அவற்றில் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். அந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும், தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அந்த மூன்று படங்களிலும் நடிப்பதற்கு முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளுக்கு சென்றதாகவும், இதற்கிடையே பல விமர்சனங்கள் எழுந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மூன்று படங்களையும் முடித்த பிறகு முழுமையாக அரசியல் பணியிலே ஈடுபட விரும்புகிறார் என்றும், அதன் பிறகு நான் சினிமாவிலிருந்து விலகினாலும் விலகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடிப்பே தனது வருமானத்தின் அடிப்படை என்பதால், நடிப்பை நிறுத்திய பிறகு திரைப்படங்களை தயாரிக்கும் பணி தொடரப்படும் என்றும், மக்கள் சேவைக்காக அரசியலைத் தேர்வு செய்ததாகவும், வருமானத்திற்காக சினிமாவைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.