தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ஒரு ஸ்டைலிஷான இயக்குனராக இருந்துகொண்டிருக்கும் கவுதம் மேனன், ரசிகர்களிடத்தில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றவர். ஆனால், ஒரு தயாரிப்பாளராக மாறிய பிறகு பொருளாதார பிரச்னைகள் காரணமாக அவரது இயக்கத்தில் படங்கள் பெரும்பாலும் தாமதமாக வெளியாகின்றன. விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் படமும் பல ஆண்டுகளாக ரிலீஸை நோக்கி காத்திருக்கிறது.
இந்த நிலையிலே, மலையாள திரையுலகில் ஏற்கனவே ஒரு நடிகராக அறிமுகமான கவுதம் மேனன், தனது இயக்குநராக மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பல யூடியூப் சேனல்களில் கவுதம் மேனன் பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து வருகிறார். சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் படத்தின் போது ஏற்பட்ட அதிருப்தி குறித்து வெளிப்படையாக பேசினார்.
ஒரு பேட்டியில் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் குறித்து கேட்டபோது, கவுதம் மேனன் “அது என் படம் அல்ல, யாரோ ஒருவருடையது. அதில் பாடல்களை மட்டுமே நான் இயக்கினேன்” என்று கூறினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷால் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக படம் தாமதமானது என்று முன்னதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.