தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டியின் மகனான இவர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘செக்கண்டு சோவ்’ திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

அதன்பின், ‘தீவரம்’, ‘பட்டம் போலே’, ‘சலலாஹ் மொபிலஸ்’, ‘வாயை மூடி பேசவும்’, ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போது நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் சூதாட்டம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், துல்கர் சல்மானின் புதிய படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநராக அறிமுகமாகும் ரவி என்பவரது இயக்கத்தில் உருவாகவுள்ள பிரமாண்ட படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். எஸ்.எல்.வி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.