இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, தனது இரண்டாவது படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளார். அவரின் முதல் படம் “ஓ மை கடவுளே” வெற்றியைப் பெற்றிருந்தாலும், வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இரண்டாவது படத்தில் இவ்வளவு பெரிய வசூலை பெற்றிருக்கிறார் என்பது சாதாரண விஷயமல்ல.

அவரின் “டிராகன்” படம் 100 கோடி வசூலை எட்டியதற்காக, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து,அன்புள்ள ரசிகர்களே, என் குழுவிற்கு நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் 100 கோடி நன்றி. படம் வெளியாகும் முன்பு சிலர் என்னுடைய தன்னம்பிக்கையை உடைக்க முயன்றபோதும், ‘நாங்க இருக்கோம், பார்த்துக்கலாம்’ என்று உறுதியாக இருந்த உங்களுக்குப் பெரிய நன்றி. இந்தப் படத்தில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்து, அடுத்த படத்தை இன்னும் சிறப்பாகக் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்”, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“டிராகன்” படம் வெளியான 10 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டது. இந்த ஆண்டில் “விடாமுயற்சி” படத்திற்குப் பிறகு 100 கோடியைத் தொட்ட இரண்டாவது படம் இதுவாகும். ஆனால், வருவாய் ரீதியாக முதலாவது முழுமையான வெற்றி படம் “டிராகன்” என்பதும் குறிப்பிடத்தக்கது.
“லவ் டுடே” படத்திற்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது படத்தையும் 100 கோடி கிளப்பில் இணைத்துள்ளார். மேலும், அவர் நடித்து அடுத்து வெளியாவுள்ள “லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்” படமும் இதேபோன்று வசூல் சாதனை படைத்தால், 100 கோடி ஹாட்ரிக் அடையும். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.