கன்னட திரைப்படங்களில் பிரபலமாக அறியப்படும் ரீஷ்மா நானையா, 2022-ஆம் ஆண்டு வெளியான ‘ஏக் லவ் யா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று அவருக்கு நல்ல வரவேற்பளித்தது. அதன்பின்னர், பல படங்களில் நடித்து, தனது நடனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது, உபேந்திரா இயக்கிய ‘யுஐ’ படத்தில் ரீஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ரீஷ்மா, மக்கள் என்னை நடனத்திற்காக மட்டுமல்ல, நடிப்பிற்காகவும் நினைவில் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், என்னுடைய பயணம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நடனம் எனது பலம், ஆனால் நடிப்பிலும் நான் என் பெயரை நிலைநிறுத்த வேண்டும், என்றார். ‘யுஐ’ படத்திற்குப் பிறகு, ரீஷ்மா துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத்துடன் ‘கேடி – தி டெவில்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.