ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் 16வது திரைப்படமாக ‘மண்டாடி’ உருவாகியுள்ளது. ‘செல்பி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மதிமாறன் புகழேந்தி இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். தெலுங்கு திரைப்பட நடிகர் சுஹாஸ் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ‘சாட்டை’ படத்தில் நடித்த மஹிமா நம்பியார், குறைந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ரவீந்திரா விஜய், சாச்சனா நமிதாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் கவனிக்கிறார், ஒளிப்பதிவை எஸ்.ஆர். கதிர் மேற்கொள்கிறார்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கூறியதாவது: கடலில் நிலவும் காற்று, அலைகள், நீரின் ஓட்டம் ஆகிய அனைத்தையும் கணிக்க தெரிந்தவரும், மீன்கள் வருகிற திசைகளையும் அதன் திசைப் பயணத்தையும் புரிந்து வைத்திருப்பவரும், மீன்பிடிக்க செல்லும் போது படகை வழிநடத்தக்கூடிய தலைவராக இருப்பார். அவர்களை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ‘மண்டாடி’ என்று அழைக்கின்றனர்.
மீன்பிடிக்கச் செல்லும் போது, படகையும் அதில் பயணிக்கும் மீனவர்களையும் வழிநடத்துவது போலவே, பாய்மரப் படகு போட்டியின் போதும் திசையைத் தெரிந்து வழிகாட்டுபவராக இருப்பவர் மண்டாடி. காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கும் சூரிக்காகவே இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. மண்டாடி என்ற கதாபாத்திரமும் அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் சூரியின் நடிப்புப் பயணத்தில் ஒரு முக்கியமான படியாக அமையும்.
மேலும் இந்த படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்திற்கு சாதாரண நடிப்பைத் தவிர, ஒரு நடிகரிடம் உடல் மற்றும் மனதளவில் வலிமையும் தேவைப்பட்டது. அந்த தேவையை சூரி போன்ற நடிகர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது. ஜி.வி. பிரகாஷ் வழங்கும் இசையும், எஸ்.ஆர். கதிர் மேற்கொள்ளும் ஒளிப்பதிவும் சேர்ந்து, உணர்வுகளை மிக நன்கு வெளிப்படுத்தக்கூடிய விளையாட்டு மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இது உருவாகிக் கொண்டிருக்கிறது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.