கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவிற்கு, தெலுங்கில் நடித்த ‘புஷ்பா’ படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படம் மூலம் அவர் இந்தியா முழுவதும் கவனம் பெறும் நடிகையாக மாறினார். இதையடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ மற்றும் விஜய்யுடன் ‘வாரிசு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தியில் நடித்த ‘அனிமல்’ மற்றும் ‘சாவா’ போன்ற படங்களும் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளன. தற்போது, ஒரு படத்திற்கு ரூ.8 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஷ்மிகா வைத்துள்ள சொத்துகள் பற்றிய விவரங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதில், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஷ்மிகா மந்தனா சினிமாவைத் தவிர விளம்பர படங்களில் நடித்தும், பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் அதிக வருமானம் ஈட்டுகிறார். பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளது. அதோடு, பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளன. மும்பை, கோவா, கூர்க் மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளில் அவருக்கு சொத்துகள் உள்ளன என கூறப்படுகிறது.