தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா , நடிப்பில் வெளியான ”கிங்டம்” படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் ரூ. 53 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில், கிங்டம்-ன் வெளியீட்டிற்குப் பின்னர் இப்பட புரமோஷனின்போது, புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கிங்டமைப் பார்த்து தன்னை அழைத்து பாராட்டியதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.தொடர்ந்து, சுகுமார் இயக்கத்தில் நீண்ட காலமாக தாமதமாகி வரும் தனது படம் குறித்து விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசினார்.
அவர் கூறுகையில், ”அர்ஜுன் ரெட்டி பட நாட்களிலிருந்தே நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன். இப்போதைக்கு, என் கையில் இருக்கும் படங்களில் நான் கவனம் செலுத்துகிறேன்” என்றார். விஜய் தேவரகொண்டா மற்றும் சுகுமார் கூட்டணியில் ஒரு படம் 2020-ம் ஆண்டில் மறைந்த தயாரிப்பாளர் கேதர் செலகம்செட்டியால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் படம் திரைக்கு வராமல், தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.