கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்டான்லி. இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் சசியுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரது முதல்படமே ஓரளவுக்கு பேசப்படத் துவங்கியது. பின்னர் தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து ‘மெர்க்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ போன்ற படங்களை இயக்கினார்.
நடிகராகவும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர்கள் சங்கத்தில் சில பொறுப்புகளையும் வகித்திருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (ஏப்ரல் 15) காலமானார்.
எஸ். எஸ். ஸ்டான்லியின் உடல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடிகர், தயாரிப்பாளர், இயக்குனராக பன்முக திறமைகளை கொண்ட கலைப்புலி ஜி. சேகரனின் மரணம் நிகழ்ந்தது. அந்த சோகத்திலிருந்து மீளும் முன்பே ஸ்டான்லியின் மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.