2019 ஆம் ஆண்டில், அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் பின்னர், இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் ‘தண்டகாரண்யம்’. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ‘தண்டகாரண்யம்’ படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷும் கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு, பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றியுள்ளார். பாடல்களை உமாதேவி, அறிவு, மற்றும் தனிகொடி எழுதியுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. நடிகர் அட்டகத்தி தினேஷ் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டார். இதற்கிடையில், இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார். அதில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 26 (நாளை) மாலை 6 மணியளவில் வெளியிடப்படும் என தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.