நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துப் 2023ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் பணிகளில் நெல்சன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். படப்பிடிப்பு தற்போது சில இடைவெளிகளை ஒட்டி நடைபெற்று வருகிறது.
இது இரண்டாம் பாகமாக இருப்பதால், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்டவர்கள் மீண்டும் இதில் நடிக்கின்றனர். ஆனால், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றமாக சில நிமிடங்களுக்கே வந்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்களா என்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமீபத்தில் ‘எம்புரான்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோகன்லாலிடம், “ஜெயிலர் 2-இல் நீங்கள் நடிக்கிறீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, அவர் நேரடியாக மறுப்பாக இல்லாமல், சரியாக பதிலளிக்காமல் தவிர்த்துப் பேசினார். இந்நிலையில், மோகன்லால் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நெல்சன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்லாலை சந்தித்து ‘ஜெயிலர் 2’ குறித்துப் பேசுவதற்காகவே அவர் சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்தப் படத்தில் மோகன்லால் நடிப்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.