தமிழில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது இவர், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘பைசன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஒரு சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு மிகுந்த பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. தற்போது, இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘D56’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ், “இது தான் என்னுடைய கனவு படம்” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ மற்றும் ‘தேரே இஷ்க் மெயின்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.