பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இருந்தார். ஈரான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததில் அவர் முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்து கார்த்திகாவுக்கு நிதியுதவியும் பாராட்டுகளும் பெருகி வருகின்றன.

இதனையடுத்து, கார்த்திகாவும் அவரது கபடி அணியினரும் சாதித்த பெருமையையும், கபடி விளையாட்டின் பெருமையையும் கொண்டாடும் நோக்கில் ‘பைசன்’ திரைப்படக் குழுவின் சார்பில், கார்த்திகாவிற்கு ரூ.5 லட்சமும், கண்ணகி நகர் கபடி அணிக்கு ரூ.5 லட்சமும், மொத்தம் ரூ.10 லட்சம் பெறுமான காசோலையை இயக்குநர் மாரி செல்வராஜ் நேரிலாக கார்த்திகாவின் கண்ணகி நகர் இல்லத்திற்கு சென்று வழங்கினார்.
‘பைசன்’ திரைப்படம் அடிமட்டத்திலிருந்து தொடங்கி, தேசிய அங்கீகாரம் பெற்று அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கைச் சித்திரமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
