ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, மலையாள திரையுலகில் ராணுவப் பின்னணியில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர் மேஜர் ரவி. மோகன்லாலை வைத்து இவர் இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார். ஆனால், 2012ல் வெளியான ‘கர்மயோதா’ மற்றும் 2017ல் வெளியான ‘1971: பியாண்ட் பார்டர்ஸ்’ ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

அதன் பிறகு மேஜர் ரவி எந்தப் படமும் இயக்கவில்லை. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தை மேஜர் ரவி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் மோகன்லாலுடன் சரத்குமார் மற்றும் ஹிந்தி நடிகர் பரேஷ் ராவலும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அம்பிகா நாயர் எழுதிய ‘குதுப் மினார்’ எனும் சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்தக் கதையை ஏற்கனவே மேஜர் ரவி மோகன்லாலிடம் கூறி அவரின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். ஆனால், தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததினால் திட்டம் தாமதமானது. தற்போது, 2026ல் இந்தப் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

