தமிழில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய விமர்சன ரீதியாக புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது நடிகர் தனுஷை முன்னனி கதாபாத்திரத்தில் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு சரித்திரக் கதையை மையமாகக் கொண்டு, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருக்கிறது.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான ‘பைசன்’ படத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 56வது திரைப்படத்தை‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் இந்த புதிய திரைப்படம் குறித்துப் பேசினார். அதில் அவர், கர்ணன் படத்தின் போதே இந்தப் படத்திற்கு ஒப்பந்தமாகியிருந்தேன். இப்போது தான் அதன் நேரம் வந்துள்ளது.இது மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம். என் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார்.