பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்.பியாக உள்ளார். அதே சமயம் சில படங்களிலும் தொடர்ந்து நடித்தும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “டேட்டிங் செயலிகள் மற்றும் லிவ்-இன் உறவுகள் இந்திய கலாசாரத்தை பாதிக்கும். நான் ஒருபோதும் டேட்டிங் செயலிகளில் சேர மாட்டேன். அவை நமது சமுதாயத்தின் உண்மையான சாக்கடைகள். ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கின்றன. அது பொருளாதார தேவையாகவோ, உடல் சார்ந்ததாகவோ அல்லது வேறு ஏதாவது வகையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு ஆண், பெண்ணுக்கும் தேவைகள் இருப்பது இயல்பு. ஆனால் அவற்றை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதே முக்கியம். அதை நாம்சரியான முறையில் செய்கிறோமா அல்லது ஒவ்வொரு இரவிலும் யாரையாவது தேடிச்சென்று வீட்டை விட்டு வெளியேறுவது போல அசிங்கமாக நடத்துகிறோமா? இப்போது டேட்டிங் செயலிகள் அதுபோலத்தான் உள்ளன. இது மிகக் கீழ்த்தரமானது. இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்கு வராது. தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ அல்லது குடும்பம் மூலம் அறிமுகமானவர்களோடு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில், படிக்கும் கல்லூரிகளில் அல்லது உங்கள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமண வாய்ப்புகளில் நல்லவர்களை கண்டுபிடிக்கலாம். ஆனால் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களே. அந்த செயலிகளில் என்னைப் போன்றவர்களை நீங்கள் காண முடியாது; தோல்வியடைந்தவர்களைத்தான் காண முடியும். லிவ்-இன் உறவுகள் குறிப்பாக பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
திருமணம் போன்ற குடும்ப அமைப்புகள் மாறாமல் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவை ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன. நமது சமூகத்தில் திருமணங்கள் மிக முக்கியம். அது கணவன் மனைவிக்குக் கொடுக்கும் விசுவாச வாக்குறுதியின் அடையாளமாகும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.