ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்த ‘3பிஹெச்கே’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. குடும்பம் மையப்படுத்தப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்திற்கு தற்போது மிகப்பெரிய பிரபலத்திடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, ஒரு ரசிகர் அவரிடம் “நீங்கள் திரைப்படங்களைப் பார்ப்பீர்களா? பார்த்தால், பிடித்த படம் எது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின், “நேரம் கிடைத்தால் நான் படங்களைப் பார்ப்பேன். சமீபத்தில் ‘3பிஹெச்கே’ மற்றும் ‘அடா தம்பிச்சா’ படங்களை ரசித்துப் பார்த்தேன்” என்று பதிலளித்தார்.
சச்சின் டெண்டுல்கர் தமிழ்ப் படங்களையும் பார்ப்பது வழக்கமாக உள்ளதென்பது இதன் மூலம் வெளிச்சமிட்டுள்ளது. இதுகுறித்து ‘3பிஹெச்கே’ தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “நான் இதற்கான பதிலை எழுத பலமுறை முயன்றும் சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது கற்பனையைத் தாண்டி நடந்த ஒரு விஷயத்தை நான் பார்த்துள்ளேன். அதை உணர்ந்து கொண்ட பிறகே நான் பதில் அளிக்க முடிந்தது” எனக் குறிப்பிட்டார்