மலையாள திரையுலகில் பிரேமம் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சவ்பின் சாஹிர். தொடர்ந்து, துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பல படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
அவருடைய ஆரம்பகாலத்தில், சவ்பின் சாஹிர் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர், துல்கர் சல்மான் நடித்த பறவ என்ற படத்தை ஏழு வருடங்களுக்கு முன்பு இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு, குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பிஸியாக இருந்தார்.
சமீபத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற திரைப்படத்தில், நண்பர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் மொழி தாண்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இதன் பலனாக, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது கூலி படத்தில் நடித்து வரும் சவ்பின், இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இயக்கத்துக்கு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது படத்திலும், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக உறுதியாக கூறியுள்ளார்.