தமிழ் திரையுலகில் வெப் தொடர்களின் தயாரிப்பு மற்றும் வெளியீடு பெரிதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘சுழல் 2’ வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முழுநீள காமெடி வெப் தொடராக ‘செருப்புகள் ஜாக்கிரதை’ தயாராகி உள்ளது.

இந்த தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்பிள்ளை கணேஷ், சபிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த தொடருக்கு, கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், எல்.வி. முத்து கணேஷ் இந்த தொடருக்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வெப் தொடரின் கதை ஒரு வைர வியாபாரியை மையமாகக் கொண்டது. வைர வியாபாரி ரத்தினம், தனது மிக முக்கியமான வைரத்தை பாதுகாப்பாக வைக்க, ஒரு செருப்பில் மறைத்து வைக்கிறார். ஆனால், அதிகாரிகள் ரெய்டு நடத்தும் அபாயம் இருந்ததால், அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ஒப்படைக்கிறார். ஆனால், தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் அந்த செருப்பைத் தொலைத்து விடுகிறார்கள். அதன் பிறகு, அந்த செருப்பை தேடி நடக்கும் பைத்தியக்காரமான பயணமே இந்தக் கதையின் மையம்.இந்த காமெடி வெப் தொடர், வரும் மார்ச் 28ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.