மயிலாடுதுறையில் பிறந்து செஸ் விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்தவர் விஸ்வநாதன் ஆனந்த். 1988-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவருக்குள்ளது. மேலும், அவர் 5 முறை உலக சாம்பியனும், 2 முறை உலக கோப்பை செஸ் சாம்பியனும் ஆகியவற்றை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியாவில் செஸ் விளையாட்டை விஸ்வநாதன் ஆனந்த் தான் பரவலாக அறிமுகப்படுத்தியவர் என்றாலும் மிகையில்லை. அவரது சாதனைகளினால் செஸ் விளையாட்டுக்கு பரவலான பிரபலமுண்டானது. இப்போது அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் பொறுப்பை ஏ. எல். விஜய் எடுக்கவுள்ளார். இதில் ஆனந்த் வேடத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. திரைக்கதை பணியில் சஞ்சய் திரிபாதி ஏ. எல். விஜயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த பயோபிக் திரைப்படத்தை மஹாவீர் ஜெயின் மற்றும் ஆஷிஸ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர், மேலும் அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

