தமிழ் சினிமாவில் தனித்துவமான உணர்வுப்பூர்வமான கதைகளை இயக்கியவர் சேரன். தனது இயக்குநர் பயணத்தில் பல நல்ல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்ததுடன், ஒரு கட்டத்தில் தானே நடிகராக மாறி கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் மட்டும் தன் பயணத்தை மேற்கொண்டு வந்த சேரன், இப்போது முதன்முதலாக மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார். நரிவேட்ட என்கிற இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் பதித்திருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக மலையாள முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார். இப்படத்தை, இஷ்க் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கி வருகிறார். மேலும், மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
டொவினோ தாமஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, “என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நரிவேட்ட மிகவும் முக்கியமான படமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.