தமிழில்‘லவ்வர்’, ‘குட் நைட்’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ தற்போது உருவாக்கியுள்ள புதிய படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்த படத்தை அபிஷன் ஜீவிதன் என்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகபதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் மற்றும் அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் அறிமுக விழாவில் நடிகர் சசிகுமார் கூறியதாவது: “ஒரு படம் நன்றாக இருக்கும் என்ற 100 சதவீத நம்பிக்கையுடன் தான் எப்போதும் வேலை செய்வோம். ஆனால், அதே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ரசிகர்கள் தரும் பொழுதுதான் அந்த படம் முழுமையாக வெற்றி பெற்றதாக உணரலாம். தேர்வு எழுதி முடித்து, முடிவுக்காக காத்திருக்கும் ஒரு மாணவன் போலவே, இந்த படத்தின் முடிவுக்காக மே 1ம் தேதிவரை காத்திருப்போம் என்றார்.
“இந்த படத்தில் என் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்ரன் உங்களுடன் எப்படி நடிக்க சம்மதித்தார் என்று கேட்கின்றனர். ஏன், நானா சிம்ரனுடன் நடிக்கக்கூடாதா? என்னிடம் அந்த தகுதி இல்லையா? நானும், அவரும் கதையின் தரத்தின்மேல் நம்பிக்கையுடன் தான் இந்த படத்தில் நடித்தோம். அவர் இன்னும் ஹீரோயின்தான், இந்த படத்திலும் நானும் ஹீரோவாகவே இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் ஸ்கிரிப்டில் எது இருந்ததோ, அதை துல்லியமாக படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர். இதுவே இந்த படத்தின் முதல் வெற்றி. இந்த படம், இலங்கை தமிழர்கள் இந்தியா வந்து நிலைநிறுத்தும் போது சந்திக்கும் வேதனைகளை நகைச்சுவை சாயலில் சொல்லுகிறது. படம் முழுவதும் காமெடியாய் இருந்தாலும், அதன் பின்புலத்தில் உண்மையான வலி இருக்கிறது. இது உலகம் முழுவதும் நாடிழந்த மக்களுக்குப் பொருந்தக்கூடியது.
இப்போது நாம் தமிழ் மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துள்ளோம். ஆனால், தமிழ் மொழியையும், அதன் கலாசாரத்தையும் விட்டுவிடக்கூடாது. இந்த படம், தமிழ் மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறது. இந்த படத்தைப் பார்த்த பத்து பேராவது தமிழைக் கற்க முனைந்தால், அதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றியாகும். இந்த படம், கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ படத்திலிருந்து பெற்ற இன்ஸ்பிரேசனின் அடிப்படையில்தான் உருவானது என சசிகுமார் கூறினார்.