‘அங்காடித்தெரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேஷ், ‘திருக்குறள்’ படத்தில் நடித்த குணா பாபுவுடன் இணைந்து ‘தடை அதை உடை’ எனும் படத்தில் நடித்து வருகிறார். பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்கும் இந்த படத்தைப் பற்றி அவர் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். தனியாகப் போராடி தன் வம்சத்தை கல்வியுடன் இணைத்த உண்மைக் கதையை சொல்லப் போகிறோம்.

அதே நேரத்தில் சமூக ஊடகங்கள், கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழும் மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு பாதிப்புகளை உண்டாக்குகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறோம்.
மேலும் தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றையும் புதிய கோணத்தில் காட்டியுள்ளோம். இரண்டு காலகட்டங்களில் கதை நடப்பதால், பல நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற்றது’’ என்றார்.