மலையாள சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் பிஜூ மேனன். 2020ஆம் ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் அவருக்கு தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் அவர் முதன்முதலாக 2005ஆம் ஆண்டு வெளிவந்த மஜா திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு ஜுன் ஆர், தம்பி, பழனி, அரசாங்கம், அலிபாபா, போர்க்களம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுமார் பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அவர் மதராஸி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனது கதாபாத்திரத்தை அவர் அற்புதமாக வடிவமைத்துள்ளார். நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன். அதேபோல் சிவகார்த்திகேயனும் சிறப்பாக வளர்ந்து வருகிறார். மலையாள சினிமாவிலும் தமிழ் சினிமாவின் தாக்கம் மிகவும் வலுவாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.
பிஜூ மேனன் குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் பிஜூ மேனன் சாரின் ரசிகன். குறிப்பாக அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமானது. குரல் ஏற்றத் தாழ்வுகளுடன் உரையாடி, அதனை நடிப்பில் வெளிப்படுத்தும் திறனை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்” என்று பாராட்டியுள்ளார்.