பிக் பாஸ் 6வது சீசன் மூலம் புகழ் பெற்ற ஆயிஷா, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுமட்டுமல்ல, உப்பு புளி காரம் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது, இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
அப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்குகிறார். கதாநாயகனாக விடாமுயற்சி கணேஷ் சரவணன் நடிக்க, இசையமைப்பாளர் சி. சத்யா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணியை சதீஷ்குமார் துரை ராஜ் மேற்கொள்கிறார்.
படம் பற்றிப் பேசிய இயக்குனர் ஜாபர், “இந்த திரைப்படம் ஒரு காமெடி திரில்லர் வகையில் உருவாகிறது. 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த ஒரு காதல் ஜோடி, சில காரணங்களால் பிரிகிறது. ஆண்டுகள் கழித்து, அவர்கள் இருவரும் வேறு ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக, அவர்கள் மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள். அந்த இடம் ஒரு அறை. திடீரென அந்த அறையின் கதவு லாக் ஆகிவிடுகிறது. இதற்கிடையில், அவர்களின் உறவினர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள். கதவு திறக்கப்பட்டு அவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்பதே படத்தின் முக்கியத் தூணாகும்,” எனக் குறிப்பிட்டார் இந்த படத்தில், கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார்.