மலையாளத்தில் ‘குஞ்சிராமாயணம்’, ‘கோதா’ மற்றும் ‘மின்னல் முரளி’ ஆகிய மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் பசில் ஜோசப். இதில் ‘மின்னல் முரளி’ திரைப்படம் பாலிவுட்டிலும் அவரை பரவலாக அறிமுகப்படுத்தி பேசவைத்தது. இதனுடன் நட்புக்காக சில படங்களில் சிறிய காமெடி வேடங்களில் நடித்திருந்த இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி, இயக்குநராக இருப்பதை புறக்கணித்து பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் கதையின் முக்கிய நாயகனாகவே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில படங்களில் வில்லனாகவும் பிரகாசமாக நடித்துத் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதைத் தவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் மலையாளத் திரையுலகில் அதிகப்படியான படங்களில் நடித்த ஹீரோவாக இவரே விளங்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் விழாவில், அவருக்கு ‘மேன் ஆஃப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டது.
இந்த விருது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “பசில் ஜோசப் தொடும் ஒவ்வொன்றும் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படமும் எவ்வளவோ சவால்களை எதிர்கொண்டு வெளியிடுகிறோம். ஆனால் அவரைப் பற்றிச் சொல்வதற்கு, வெள்ளிக்கிழமை அவருடைய படம் திரைக்கு வருகிறது என்பதே போதுமான உதாரணம்” என நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.