ஒரு திரைப்படம் மீண்டும் வெளியீட்டில் கூட சாதனை படைக்க முடியும் என்றால், அது நிச்சயமாக ‘பாகுபலி’ படமாகத்தான் இருக்கும் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் 2015ல் வெளிவந்த ‘பாகுபலி 1’ மற்றும் 2017ல் வெளிவந்த ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து, சில காட்சிகளை நீக்கி, ‘பாகுபலி: த எபிக்’ என்ற பெயரில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியிட்டனர்.

பான் இந்திய அளவில் வெளியான இந்த படம், வெளியான இரண்டே நாட்களில் 30 கோடியைத் தாண்டிய வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் முதல் நாளில் சுமார் 19 கோடியும், இரண்டாம் நாளில் சுமார் 11 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் நாள் சனி, நான்காம் நாள் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் கூடுதல் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்க வாய்ப்புள்ளது. இதனால் மொத்த வசூல் 50 கோடியைத் தாண்டியிருந்தாலும் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
இதன் மூலம் இதற்கு முன்பு வெளியான அனைத்து ரீரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்து, ‘பாகுபலி: த எபிக்’ புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. புதிய படங்களுக்குக் கூட வசூல் சரிவாக இருக்கும் இந்நேரத்தில், ஒரு மீண்டும் வெளியீடு செய்யப்பட்ட படம் இத்தகைய பெரும் வரவேற்பைப் பெறுவது திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

