எதார்த்தத்தனமான படங்களை இயக்குவதில் தனிச்சிறப்பு பெற்றவர் இயக்குனர் ராம். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். தற்போது இவரது இயக்கத்தில் ‘பறந்து போ’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிர்ச்சி சிவா முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார் மேலும் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைந்துள்ளார்.

பிடிவாதமான ஒரு பள்ளி சிறுவனும், பணத்தை மட்டுமே முக்கியமெனக் கருப்பதற்குள் மூழ்கிய அவனது தந்தையும், நகர வாழ்கையை விட்டு விலகி மேற்கொள்ளும் பயணத்தை மையமாகக் கொண்ட ‘ரோட் டிராமா’ வகையிலான கதை இந்த ‘பறந்து போ’ திரைப்படம். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மேலும், ‘பறந்து போ’ திரைப்படம், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை பாராட்டிய வெற்றிமாறன், “ஒரு தந்தையாக, இந்த படம் எனக்குள் பல சிந்தனைகளை உருவாக்கியது. ராம் இயக்கிய தமிழ் படங்கள் எப்போதுமே தனித்தன்மை உடையவை. ஆனால் ‘பறந்து போ’ அவரது கம்போர்ட் சோனில் இல்லாமல், ஒரு புத்துணர்வூட்டும் முயற்சியாக அமைந்திருக்கிறது. அவரது படங்கள் பொதுவாகவே தாக்கம் ஏற்படுத்தும், ஆனால் இந்த படம் எனக்கு மிகவும் ஆழமான தாக்கம் ஏற்படுத்தியது. தந்தை கதாபாத்திரத்தில் சிவா சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சில தருணங்களில் அவரின் உரையாடல்கள் நம்மையும் யோசிக்க வைக்கின்றன. இப்படம் அனைவருக்கும் நெருக்கமாகத் தோன்றும். இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, என் குழந்தைகளுடன் நான் எவ்வாறு இருக்கிறேன், எதை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். இப்படியான எண்ணங்களை ஏற்படுத்திய இயக்குனர் ராமுக்கும், படக்குழுவிற்கும் நன்றி என்றார்.