அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ‘ஆர்யன்’ திரைப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஷ்ணு விஷால் தெரிவித்ததாவது: “ஆர்யன் ஒரு சீரியல் கில்லர் கதையை மையமாகக் கொண்ட த்ரில்லர் படம். இதில் துணிச்சலான போலீஸ் ரோலில் நடித்துள்ளேன். இந்த கதையை முதலில் அமீர்கான் கேட்டபோது உடனே நடிக்க சம்மதித்தார், ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. அமீர்கான் நடிக்க இருந்த அந்த ரோலை செல்வராகவன் சிறப்பாக செய்துள்ளார்.
என் அப்பா போலீஸ் அதிகாரி என்றாலும், இந்த கேஸை பற்றி அவரிடம் ஆலோசனை கேட்டேன்; ஆனால் அவர் ‘இந்த கேஸை பொறுத்தவரை தாமதிக்க வேண்டாம்’ என்று சொன்னார். ஒரே ஆண்டில் எப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி ஆகிய இரண்டு படங்கள் வெற்றி பெற்றன. எல்லா படங்களையும் நான் தயாரிக்க வேண்டும் என விருப்பமில்லை; சில காரணங்களால் தயாரிப்பாளர் ஆனேன். ஆர்யன் படத்தில் செல்வராகவன் நடித்திருக்கும் ரோல் அற்புதமாக வந்திருக்கிறது.
இந்த படம் ராட்சசன் படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதை. ஷ்ரத்தா ஸ்ரீநாத் இதில் நிருபராக நடித்துள்ளார். 60-65 வயது வரை சினிமாவில் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. கிரிக்கெட் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. அடுத்ததாக அருண்ராஜ் இயக்கத்தில் பாக்சிங் கதையிலும், சதீஷ் இயக்கத்தில் லவ் ஸ்டோரி ஒன்றிலும் நடிக்கவிருக்கிறேன்,” என்றார்.