தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி தற்போது நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. இந்த படத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கு மேல், நானி தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் ‘தி பாரடைஸ்’ என்ற மற்றொரு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பை அனிருத் செய்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், அந்த ‘தி பாரடைஸ்’ படம் வெளியாகும் நாளின் மறு நாளே தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்திருக்கும் ‘பெத்தி’ என்ற திரைப்படமும் திரைக்கு வரவிருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான நானி மற்றும் ராம் சரண் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த பாக்ஸ் ஆபீஸ் மோதல் குறித்து நடிகர் நானி சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ‘ஹிட் 3’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் பேசும் போது அவர், “தி பாரடைஸ்’ படத்தை மார்ச் 26ம் தேதி ரிலீசு செய்ய திட்டமிட்டுள்ளோம். எதையும் ஒத்திவைப்பது குறித்து இறுதி முடிவை தயாரிப்பாளர்கள்தான் எடுப்பார்கள். ஆனால், இரண்டு படங்களும் திட்டமிட்டபடி திரைக்கு வந்தால், அவை இரண்டும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களாக மாறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.