இளமைத் துள்ளலுடன் டோலிவுட் சினிமாவில் வலம்வரும் நடிகர் நாகார்ஜுனா, இந்த ஆண்டில் நடித்த ‘குபேரா’ மற்றும் ‘கூலி’ எனும் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றன. இவ்விரு படங்களிலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். தற்போது, அவரது 100வது திரைப்படம் தற்காலிகமாக ‘கிங் 100’ என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இதனை இயக்குகிறார்.

இந்நிலையில், இந்த படத்துக்கு ‘லாட்டரி கிங்’ என இறுதி தலைப்பிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாகார்ஜுனாவின் 100வது படமாக இருப்பதால், இதில் அவரது மகன்கள் நாகசைதன்யா மற்றும் அகில் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ‘மனம்’ என்ற படத்தில் நாகார்ஜுனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ், மகன் நாகசைதன்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் ஒரே படத்தில் நடித்தது சினிமா வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். அதேபோல், தனது நூறாவது படத்திலும் இரு மகன்களும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே நாகார்ஜுனாவின் விருப்பமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.