தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படம் அவருடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் ‘பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்த பிறகு, அதை மீண்டும் குறைக்க அவரால் முடியவில்லை எனக் கூறப்பட்டது. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அவரது தோற்றத்தை கிராபிக்ஸ் மூலம் சரி செய்ததாகச் சொல்லப்பட்டது.

தெலுங்கின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான கிரிஷின் இயக்கத்தில் உருவாகும் ‘காட்டி’ என்ற படத்தில் அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பே ஜனவரி மாதத்தில் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது, பின்னர் அது நிறுத்தப்பட்டது. தற்போது, ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா மற்றும் ஒடிஷா எல்லையில் கஞ்சா கடத்தல் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்பது தகவல். ‘வேதம்’ படத்துக்குப் பிறகு, 14 ஆண்டுகளின் பின்னர் கிரிஷ் மற்றும் அனுஷ்கா இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும்.