“8 மணி வேலை நேர திட்டத்தை சினிமாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. முதலில் இந்த கருத்தை முன்வைத்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. பின்னர் ராஷ்மிகா மந்தனாவும் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷும் இதே கருத்தை மீண்டும் முன்வைத்திருக்கிறார். அவர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வருகிற 28ஆம் தேதி வெளிவருகிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷிடம், பத்திரிகையாளர் சந்திப்பில் 8 மணி நேர வேலை பற்றி கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:

தற்போது 8 மணி நேர வேலை தொடர்பான ஆதரவு அதிகரித்து கொண்டிருக்கிறது. இது நடிகைகள் மட்டுமல்லாமல், லைட்மேன் முதல் அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் 8 மணி நேரம் வேலை செய்தாலும், படப்பிடிப்புத் தளத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு 7 மணி அருகே தான் இருக்கும். வீட்டிற்கோ அல்லது ஓட்டல் அறைக்கோ செல்லும் நேரம் 8 அல்லது 9 மணி ஆகிவிடுகிறது. அதன் பிறகு ஜிம், வொர்க் அவுட், உணவு சாப்பிடுவது போன்றவற்றை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கே மேல்தான் உறங்க முடிகிறது.
அதற்குப் பிறகு அதிகாலையில் மீண்டும் படப்பிடிப்புக்காக எழுந்து செல்ல வேண்டியுள்ளது. மலையாள திரைப்படத் துறையில் 12 மணி நேர வேலை கட்டாயமாக உள்ளது, ஏனென்றால் அங்கு பட்ஜெட் கட்டுப்பாடு மற்றும் குறுகிய கால படப்பிடிப்பு போன்ற சூழ்நிலைகள் இருக்கின்றன. அந்த நிலைக்கு ஏற்ப 12 மணி நேரம் பணிபுரியவும் நான் தயாராக உள்ளேன். ஆனால் உடல் நலத்தை கருத்தில் கொண்டால், 8 மணி நேர வேலைதான் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

