‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றதையடுத்து, தெலுங்குத் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்தார். தற்போது அவர் தமிழ் இயக்குநர் அட்லி இயக்கும், AA22XA6 என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்குப் பிறகு, ‘கேஜிஎப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் புதிய திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இதைப் பற்றிய தகவலை இப்படத்தைத் தயாரிக்க உள்ள பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார். தற்போது இருவரும் அவர்களுடைய நடப்பு பட வேலைகளை முடித்துவிட்டு, இந்த புதிய திரைப்படமான ‘ராவணம்’ படத்தில் இணைவார்கள் எனப்படுகிறது.
இத்திரைப்படம், ராமாயண கதையை மையமாகக் கொண்டு, ராவணன் கதாபாத்திரத்தை மாறுபட்ட கோணத்தில், ‘பேன்டஸி’த் திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர், மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ராவணன்’ திரைப்படமும் 2010ஆம் ஆண்டு இதே கதையை தழுவி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ‘ராவணம்’ திரைப்படம் மிகுந்த செலவில், பிரமாண்ட தயாரிப்புடன் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.