ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்றது. தற்போது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதே நேரத்தில், சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்ற தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக அனிருத் மற்றும் ஜி.வி. பிரகாஷுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளர், படத்தின் அப்டேட்களை பகிர்ந்துள்ளார். அவர், “இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் 7 நாட்களில் முடிவடையும். படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். தமிழில் எங்களது முதல் படம் இது என்பதால், பிளாக்பஸ்டராக இருக்கும் என நம்புகிறோம்,” என கூறியுள்ளார்.