தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தற்போது இவர் நடித்து வரும் முக்கியமான படங்கள் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” எனும் படங்களாகும். திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் கவனிக்காமல், அஜித் “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ்” என்ற நிறுவனத்தை துவங்கி பைக் ரைடிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு வணிக நோக்கில் பல்வேறு ரைடிங் சேவைகளை வழங்கி வருகிறார்.
அதனைத் தவிர, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்பது குறித்து அறிவித்து, “அஜித் குமார் ரேசிங்” என்ற புதிய அணியை துவக்கியுள்ளார். அந்த வரிசையில் துபாயில் அமைந்துள்ள ஆட்டோடிரோம் பந்தய தளத்தில், அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் கார் மூலம் டெஸ்டிங் செய்துள்ளார்.
இது குறித்து பல புகைப்படங்கள் மற்றும் குறுகிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. மேலும், அவரது ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார், மற்றும் அந்த வீடியோ பலராலும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையொட்டி “அஜித் குமார் ரேசிங்” அணிக்கென தற்போது https://ajithkumarracing.com/ என்ற புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது என செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகி ட்ரெண்ட் ஆனது. ஆனால் இது போலி இணையதளம் யாரும் நம்ப வேண்டாம் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.