லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ளது. இதன் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நேற்றிரவு, இப்படத்தின் டிரைலர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவில், இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்திடம் காட்சிகள் குறித்து விளக்கிக் கொடுப்பது, அதனை அவர் செயலில் கொண்டு வருவது மற்றும் ஆக்ஷன் காட்சிகள் எவ்வாறு படமாக்கப்பட்டன என்பதற்கான முக்கிய தருணங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதால், இந்த ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 900 தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது. அதேசமயம், கேரளாவில் 250, கர்நாடகாவில் 250, ஆந்திரா – தெலுங்கானா பகுதியில் 500, வெளிநாடுகளில் 1500, மேலும் சில பிற மொழிகளில் 250 தியேட்டர்களில் ‘விடாமுயற்சி’ திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மொத்தம் 3650 தியேட்டர்களில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தை வெளியிட இருக்கின்றனர்.