உலக அழகி ஐஸ்வர்யா ராயும் தானும் அழகுப் போட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்கிற புதிய ஆச்சரிய தகவலை பகிர்ந்துள்ளார் நடிகையும் மலையாள நடிகர் சங்கத் தலைவருமான ஸ்வேதா மேனன். இது குறித்து அவர் பேசுகையில், “ஒரு நாள் நான் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய போது கோவையில் நடைபெறும் மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை என் தந்தை கொடுத்தார். அது அவருக்கு தெரியாமலேயே நான் விண்ணப்பித்து இருந்தது. அவருக்கு விருப்பமில்லை என்றாலும் கூட அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உறுதுணையாக இருந்தார். அப்போது மூன்றாவது ரன்னராக வந்தேன். அதன் மூலம் கேரளாவில் கொஞ்சம் பிரபலமானேன். படங்களில் நடிக்க தொடங்கிய பின்னரும் கூட இன்னொரு பக்கம் அழகி போட்டிகளில் கலந்து கொண்டேன். அந்த சமயங்களில் ஐஸ்வர்யா ராயும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது சில சமயம் அவருடைய ரூம் மேட் ஆகவும் அவருடன் நான் தங்கியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
