நடிகை கீர்த்தி சுரேஷ் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. சந்துரு ஏற்கனவே ‘சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில்‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார். பின்னர் அவர், ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். இப்போது இருக்கின்ற பெரிய பிரச்சனை ‘ஏஐ’. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று கேட்கும் அளவிற்கு ரியலாக இருக்கிறது.
ஏ.ஐ தொழில்நுட்பம் மிகப் பெரிய சவாலாக தற்போதைய உலகில் அவதாரம் எடுத்துள்ளது. என் உண்மையான புகைப்படத்தை ஏ.ஐ. வைத்து, வேறு உடைகளுடனும் வேறு போஸ்களுடனும் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இவற்றை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஆபத்தானதாகவும் உள்ளது என்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

