சென்னையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் சாதாரண ரத்தப் பரிசோதனைகள் மட்டுமல்லாது, சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பலவகையான பரிசோதனைகள் அனைத்தும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சமூகத்தினருக்கும் இலவசமாக முழுமையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் இந்த முகாம்களில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தை வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி பாராட்டியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ஒரு நோயின் தீவிரத்தன்மையை மிக விரைவாக அறிந்து கொள்வது மிக முக்கியம். அப்போது மட்டுமே சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் கிராமப்புற மக்களுக்கும் நவீன மருத்துவ சேவையை கொண்டு சேர்க்கும் விதத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார தடைகள் இல்லாமல் அனைத்து மக்களும் இலவசமாக இதன் பயன்களை பெற முடிகின்றது என்பது மிகவும் பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.