டெல்லியில் 6 வயது குழந்தை தெருநாய் கடியால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் தெருநாய்கள் பிரச்சினை நீண்ட காலமாகவே விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்தது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல்கள் மக்களை கவலையடையச் செய்திருந்தன. இந்த பிரச்சினையை உச்ச நீதிமன்றம் மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. இதன் பேரில், 10 லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை சதா கண்ணீர் மல்க அழுது கொண்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெருநாய்களுக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், “6 வயது குழந்தையின் மரணத்திற்கு காரணம் ரேபிஸ் நோய் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சுமார் 10 லட்சம் நாய்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்நாய்கள் அனைத்திற்கும் காப்பகங்களை அமைப்பதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசம் போதுமானதல்ல. மேலும், இவ்வளவு குறுகிய காலத்தில் காப்பகங்களை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், நாய்கள் பெருமளவில் கொல்லப்படும் சூழல் உருவாகும். தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளுமே காரணம். அவர்கள் நாய்களுக்கு தடுப்பூசி போடுவதிலும், கருத்தடை செய்வதிலும் கவனம் செலுத்தவில்லை. விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு திட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்தத் திட்டத்திற்கு சரியான பட்ஜெட்டை ஒதுக்கி திறம்பட செயல்படுத்தியிருந்தால், இன்று நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம்.
இப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எந்த அதிகாரிகளை அணுகுவது, எங்கு சென்று போராடுவது எனத் தெரியவில்லை. ஆனால் நான் சொல்லக்கூடிய ஒன்று மட்டுமே உண்டுஇந்த உத்தரவு என்னை மனரீதியாக உடைத்துவிட்டது. இது ஒரு சரியான நடைமுறையே அல்ல. நம் நாட்டை நினைத்தும், நம்மைச் சுற்றியிருப்பவர்களை நினைத்தும், இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் ஒரு முறை கூட யோசிக்காதவர்களை நினைத்தும், எனக்கு வெட்கமாக இருக்கிறது. தயவுசெய்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று அவர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்.