நடிகை ரம்யா பாண்டியன் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதற்குப் பிறகு ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். இவரது விதவிதமான போட்டோஷூட் படங்கள் பெரும் அளவிலான ரசிகர்களை ஈர்த்தன.
யோகா பயிற்சியின் போது ரம்யா பாண்டியனுக்கும் பஞ்சாபை சேர்ந்த யோகா பயிற்சியாளர் லோவல் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று (நவம்பர் 8) அவர்களின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா ரிஷிகேஷில் உள்ள சிவபுரி எனும் இடத்தில் கங்கை நதிக்கரையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் ரம்யா பாண்டியனின் தாய் சாந்தி, சகோதரி திரிபுரசுந்தரி, தம்பி பரசுராமன் ஆகியோரும் அவரது சித்தப்பாவான நடிகர் அருண் பாண்டியன், மகள் நடிகை கீர்த்தி பாண்டியன், மருமகன் நடிகர் அசோக் செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம்.