ரஜினிகாந்த் நடித்தும் நெல்சன் இயக்கத்திலும் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் பதிவு செய்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜெயிலர் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு பகுதி கோவையில் படமாக்கப்பட்டது. அதன் பின், தற்போது படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அட்டப்பாடி மலைத் தொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்தச் செல்பியில், ‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவடைந்துள்ளது மற்றும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் முதல் நாளாக உள்ளது என்கிற குறிப்புடன், தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ‘நீலம்பரி’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் படத்திற்கு பிறகு பல வருடங்களுக்குப் பிறகு, ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்