தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் பூரி ஜெகநாத். 2000ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் ‘பத்ரி’ திரைப்படத்தை இயக்கி தனது இயக்குநர் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் மகேஷ் பாபு நடிப்பில் ‘போக்கிரி’ திரைப்படத்தை இயக்கினார், இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மற்றும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

அதன்பின், இட்லு ச்ரவனி சுப்ரமணியம், அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் போன்ற திரைப்படங்களை இயக்கி பெரும் வெற்றிகளை பெற்றுள்ளார். இவர் அண்மையில் இயக்கிய ‘டபுள் இஸ்மார்ட்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பூரி ஜெகநாத் தனது அடுத்த படமாக நடிகர் விஜய் சேதுபதியை முன்னணி கதாப்பாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இந்தப் புதிய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான துனியா விஜய் இப்படத்தில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸூம் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் அண்மையில் ’35 சின்ன விஹயம் இல்ல’ திரைப்படத்தில் நடித்திருந்தார், அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.