கன்னட நடிகை குஷி ரவி, 2020ஆம் ஆண்டு வெளியாகிய ‘தியா’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கொரோனா காரணமாக ஓடிடி மூலம் வெளியான இந்த படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது.அதன்பிறகு, ‘பிண்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான குஷி, 2021ஆம் ஆண்டு, அஸ்வின் குமாருடன் நடித்த ‘அடிபோலி’ என்ற இசை ஆல்பம், 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

இதைத் தொடர்ந்து, குஷி, சமீபத்தில் ‘பட்டி’ என்ற பாடல் ஆல்பத்தில் நடித்திருந்தாலும், இன்னும் எந்த தமிழ் திரைப்படத்திலும் அவர் நடித்ததில்லை.இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தனது தமிழ் திரைப்பட அறிமுகம் குறித்து பேசிய குஷி, “நான் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் காத்துக்கொண்டிருக்கிறேன். ‘தியா’ போலவே என் தமிழ் அறிமுகமும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “நீங்கள் எந்த இயக்குநருடன் பணியாற்ற விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால், மணிரத்னம் சார் எனது பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ராஜ்குமார் பெரியசாமி சார் உடனும் நான் பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கும் யாருடன் வேண்டுமானாலும் பணியாற்ற தயார் எனக் கூறினார்.