ஆண்களுக்கும் நகை வாங்கும் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதைக் காட்டும் விதமாக, நடிகர் மோகன்லால் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்து, இதை இயக்கியவர் சமீபத்தில் வெளியான ‘தொடரும்’ படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா ஆவார்.

விளம்பரக் காட்சியில், மோகன்லால் நகைக்கடை விளம்பரத்திற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார். அவரை உள்ளே அழைத்து செல்கிறார்கள். அங்கு ஒரு நடிகை நகையை அணிந்து பார்ப்பதை அவர் பார்க்கிறார். அசந்திருந்த வேளையில், அந்த நகையை கையில் எடுத்துக்கொண்டு தன் கேரவனுக்குச் செல்கிறார். பின்னர் அந்த நகை காணாமல் போனதாக பரபரப்பான நிலை உருவாகி அனைவரும் தேட ஆரம்பிக்கிறார்கள். இதையறிந்த பிரகாஷ் வர்மா, மோகன்லால் உள்ள கேரவனுக்குச் சென்று பார்க்கிறார். அங்கு மோகன்லால் அந்த நகையை கழுத்தில் அணிந்தபடி கண்ணாடியில் தனது அழகை ரசிக்கிறார். மேலும், “இப்படி ஒரு நகையைப் பார்த்தால் யாருக்குத் தான் ஆசை வராது?” எனும் வசனத்துடன் அந்த விளம்பரம் முடிகிறது.
இந்த விளம்பரத்தில் மோகன்லால் நகையை அணிந்து, பெண்களுக்கு உரிய மென்மையுடனும் நளினத்துடனும் நடித்த விதத்தைப் பார்த்து, நடிகை குஷ்பூ மெய்சிலிர்த்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், அற்புதமான விளம்பரம். இதில் நடிப்பது தனி திறமை தேவைப்படும் விஷயம். நமது பவர்ஹவுஸ் மோகன்லால் அதை எளிதாகச் செய்து இருக்கிறார். ஆண்களுக்குள் இயற்கையாகவே ஒளிந்திருக்கும் பெண்மைத் தன்மையை மிக அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார். மோகன்லால் சார், இது போன்ற வேலைகளை சரியாக செய்யக் கூடியவர் நீங்கள் மட்டும்தான். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இப்படம் போலவே வித்தியாசமான யோசனையை கொண்டு வந்த இயக்குநர் பிரகாஷ் வர்மா மற்றும் அவரது குழுவிற்கு என் முழு பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.