மனிதர்களின் எண்ணங்களைப் போலவே, ஒவ்வொரு வண்ணமும் தனித்துவமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை. நான் வரைக்கும் ஓவியங்களில் வண்ணங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என ஒரு புறம் கூறும் ஹரிதா, மறுபுறம் “இசை என்பது இறைவன் அளித்த ஒரு அருமையான வரம்” எனும் எண்ணத்துடன் அதில் உற்சாகம் காட்டுகிறார். தன்னிடம் உள்ள சிறப்பான இசை உபகரணங்களை பயன்படுத்தி, இயற்கையின் இசையை பிறருக்குப் பகிர்ந்து மகிழ்விக்கிறார்.

பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக விளங்கிய இவர், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். ஓவியர், இசைக் கலைஞர், கதையாளர், நடிகை, தடகள வீராங்கனை, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என பல தளங்களில் சிறந்து விளங்குகிறார் ஹரிதா.
சமீபத்தில் அளித்த பேட்டியில், “என்னை நன்கு அறிந்த இயக்குநர்கள் எனை தங்களின் படங்களில் நடிக்க அழைத்தனர். அதன் காரணமாக ‘ஜிப்ஸி’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சூரரைப்போற்று’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். தற்போது ‘பைசன்’, ‘ராட்சசன்’, ‘துண்டுபீடி’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் 49 படங்களில் பணியாற்றி விட்டேன். படப்பிடிப்புகளுக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், சவுண்ட் ஹீலிங் பயிற்சிகளை வழங்கியும் வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.