கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் யாஷ். அவர் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் ‘ராக்கி’. அந்தப் படத்தின் பின்னர் பல்வேறு கன்னடத் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்னர் யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படம் இந்திய முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அந்தப் படத்தின் மூலம் இந்திய சினிமா உலகையே தன்னைக் கவனிக்க வைத்தார் யாஷ்.

இப்போது அவர் ‘டாக்ஸிக்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இது போதைப்பொருள் கடத்தல் உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு கேங்க்ஸ்டர் டிராமா என கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தை பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ‘கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேசமயம், ‘டாக்ஸிக்’ படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சியைச் சார்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக வைரலாகியுள்ளது.அந்த வீடியோவில், யாஷ் மேல்சட்டை இல்லாமல் ஃபிட்னஸ் உடற்கட்டோடு ஒரு பால்கனியில் நின்று புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.