நடிகர் கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் வெளியான ‘லிப்ட்’ மற்றும் ‘டாடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதற்கிடையில், கவின் தற்போது ‘கிஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குநர் சதீஷ் இயக்கிய இப்படத்தில், ‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி, கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், ஒரு ஜோடி லிப்-லாக் முத்தம் கொடுக்கும் காட்சியைப் பார்த்ததும், அவர்களின் காதலின் முடிவு எப்படியிருக்கும் என்று கவினின் கதாபாத்திரம் சிந்திக்கும் விதமாக கதை அமைகிறது. இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு படத்தை இயக்கியுள்ளனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கதை சொல்வதுபோல் தனது குரலை பின்னணி குரலாக கொடுத்துள்ளார். இதற்கான வீடியோவை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.